Thursday, 12 February 2015

அசுர பலத்துடன் ஆம் ஆத்மி.

அசுர பலத்துடன் ஆம் ஆத்மி.


 இந்திய பத்திரிகை மற்றும் ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளையும் தாண்டி தில்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இம்முறை மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் பாஜக தலைவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சக்தி மிக்க அரசியல் தலைவராக தில்லி மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை தெளிவு படுத்துகிறது. பாஜகவின் பிரசாரத்தைப் பற்றி துளியும் கவலைப்படாமல் தேர்தல் களத்தில் தனது நிலைப்பாட்டை மக்களிடம் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார் கெஜ்ரிவால். கடந்த தேர்தலின் போது தான் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டு அவர் வைத்த கோரிக்கைகளை மக்கள் முழுவதுமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
 ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளை பாஜகவினர் ஏற்றுக் கொள்ளாத நிலையில் தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு நல்ல பாடத்தைத் தந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சேவை இனி நாட்டுக்கு தேவை இல்லை என்பதையும் இந்த தேர்தல் முடிவு மூலம் தலைநகரத்து மக்கள் மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.
 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றதையடுத்து இந்த தேர்தல் முடிவு மக்களுக்கு கிடைத்த வெற்றி. பழி வாங்கும் அரசியல், எதேச்சதிகாரம், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை பரப்புதல் போன்றவற்றுக்கு எதிரான தீர்ப்பு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தில்லி தேர்தல் முடிவு திருப்பு முனையானது. ஜனநாயகத்தில் அரசியல் பழிவாங்கும் போக்குக்கு இடமில்லை என்பதை காட்டியுள்ளது. இந்த மாற்றம் இப்போதைக்கு அவசியமான ஒன்று கூறியுள்ளார்
 நரேந்திர மோடி அரசுக்கு தில்லி வாக்களர்கள் கொடுத்துள்ள மரண அடி என்கிறார் மதிமுக பொதுச்செயலர் வை.கோ. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களின் மனக் குமுறல்களை உணர்ந்திருந்தார். உணர்வுகளை மதித்தார். இந்த அளவுக்கு பெரிய வெற்றி தனக்கு அச்சத்தைக் கொடுக்கிறது என அவர் கூறியிருப்பதில் இருந்தே அவர் மக்கள் விரும்பும் ஆட்சியைத் தருவார் என்ற நம்பிக்கை ஏற்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 தில்லி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி பெற்றுள்ள வெற்றி, வகுப்புவாத, பிளவு சக்திகளுக்கு எதிராக பலமொழிகள் பேசும் மக்களைக் கொண்ட மக்கள் கொடுத்துள்ள தெளிவான தீர்ப்பு. ஒரு வகையில் இந்தியப் பெருமக்களின் பொதுவான அபிப்ராயத்தை வெளியிடுவதாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாக தான் கருதுவதாக தெரிவிக்கிறார் இ.கம்யூ கட்சியின் மாநில செயலரான தா.பாண்டியன்.
 தலைவர்களின் கருத்துக்கள் எப்படியிருந்தாலும் இந்திய தேர்தல் வரலாற்றில் 95 சதவீத இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கும் ஆம் ஆத்மியின் ஆட்சி மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதாக அமைய வேண்டும். ஊழல், கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும். தலைநகர் தில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்தப்போகும் ஆட்சியை நூறு கோடி மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.

No comments:

Post a Comment