குமரியில் மூலிகைப் பண்ணை அமையுமா?-
தி. ராமகிருஷ்ணன்
By கன்னியாகுமரி
First Published : 17 February 2015 12:23 AM IST
ஆயிரக்கணக்கான பாரம்பரிய சித்த வைத்தியர்களையும், நூற்றுக்கணக்கான மூலிகைகளையும் கொண்ட குமரி மாவட்டத்தில் மூலிகைப் பண்ணை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சித்த மருத்துவர்களிடையே வலுப்பெற்றுள்ளது.
தமிழகத்தின் ஐந்து திணைகளில் நான்கு திணைகளை (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) உள்ளடக்கிய பகுதியாக குமரி மாவட்டம் விளங்குகிறது. இயற்கையாகவே அனைத்துத் தரப்பு மூலிகைகளும் இங்கு உள்ளதால் அதிகமான மக்கள் எந்த ஒரு வியாதிக்கும் மூலிகை மருந்துகள் மூலமாகவே தீர்வு காண்கிறார்கள். மேலும் இம்மாவட்ட மக்கள் ஆன்மிக வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து வாழ்வதால் சித்த வைத்திய முறையை முழுமையாக நம்புகின்றனர்.
இம் மாவட்டத்தின் வனப்பகுதிகளான கீரிப்பாறை, பேச்சிப்பாறை, திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கும் அரியவகை மூலிகைகளான கச்சோலா,சர்ப்பகந்தா, குருந்தொட்டி வேர் உள்ளிட்டவை அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப் பகுதியில் உள்ள மூலிகைகள் தொடர்ந்து 4 ஆண்டுகள் வரை மழை நீரின்றி பட்டுப் போனாலும் மீண்டும் மழை பெய்யும்போது துளிர்த்து விடும் தன்மை வாய்ந்தது என்கின்றனர் பாரம்பரிய சித்த மருத்துவர்கள்.
இது குறித்து பாரம்பரிய சித்த மருத்துவரான வே.கணபதி(படம்) கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் 2000-த்துக்கும் அதிகமான மூலிகை மருத்துவர்கள் உள்ளனர். இவர்கள் சாதரண தலைவலி தொடங்கி உடலில் ஏற்படும் வெட்டுக்காயம் வரை சிறந்த மூலிகை மருந்துகளைத் தயாரித்து சிகிச்சையளிக்கின்றனர். பாரம்பரிய மூலிகை மருந்துகளைச் சாப்பிடும் மனநிலை உள்ள மக்கள் இம் மாவட்டத்தில் அதிகமாக உள்ளதால் வீடுகள் தோறும் மூலிகைத் தோட்டங்கள் அமைத்துள்ளனர். வீடுகள் மற்றும் பள்ளி,கல்லூரிகளில் வளர்க்கும் வகையிலான 14 மூலிகைகள் அடங்கிய செடிகளை நாங்களே தயாரித்து வழங்குகிறோம். இதுவரையிலும் இம் மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான மூலிகைத் தோட்டங்களை அமைத்துள்ளோம். குமரி மாவட்டத்தின் மூலிகைகளின் கூடாரமாக விளங்கும் மருந்துவாழ் மலையில் தற்போது 360 வகையான மூலிகைகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 350 அடி உயரமும், இரண்டரை சதுர கி.மீ. பரப்பளவும் கொண்ட இம்மலையின் மேல்பகுதியில் 6-க்கும் அதிகமான நீர்ச்சுனைகள் உள்ளன. இதனால் மூலிகைகள் இன்றளவும் அழிந்து விடாமல் பாதுகாக்கப்படுகிறது. இங்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் வரை மாவட்டம் முழுவதிலும் இருந்து வரும் மூலிகை மருத்துவர்கள் மூலிகைகளைப் பறித்துச் சென்று மருந்துகளைத் தயாரித்து வந்தனர். ஆனால் தற்போது இம்மலை வனத்துறையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளதால் வைத்தியர்கள் அங்கு செல்ல முடியவில்லை. குறிப்பாக இம் மலையில் கிடைக்கும் குக்ளூ என்ற மூலிகை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி மனிதர்களுக்கு இதயநோய் வராமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது.
இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பிசினைப் பயன்படுத்தி மருந்து தயாரிக்கப்படுகிறது.
மூலிகை மருத்துவத்தை குமரி மக்கள் பெரிதும் நம்புவதால் எளிதாகக் கிடைக்கும் மூலிகைச் செடிகளான வசம்பு, செம்பருத்தி, மணத்தக்காளி, துளசி, நிலவேம்பு, சோற்றுக் கற்றாழை, கீழாநெல்லி, நந்தியாவட்டை, ஆடாதொடா உள்ளிட்ட மூலிகைகளின் குணங்களை அறிந்து வீடுகளில் மூலிகைத் தோட்டங்களை அமைக்க முன்வர வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களிடமும், பள்ளி, கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். பாரம்பரிய சித்த மருத்துவத்தைக் காக்கும் விதமாக தமிழக அரசு அனைத்து விதமான மூலிகைகளையும் உள்ளடக்கிய பண்ணை அமைத்து மூலிகை மருத்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.
அகில இந்திய சித்த மருத்துவக் கழகத்தின் செயலரான என்.எம்.ஹரீஸ் கூறியதாவது:
அகில இந்திய சித்த மருத்துவக் கழகத்தில் 900 சித்த மருத்துவர்கள் குமரி மாவட்டத்தில் மட்டும் பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவருமே பாரம்பரிய சித்த மருத்துவர்கள். இதுதவிர 1500-க்கும் அதிகமான சித்த மருத்துவர்கள் மாவட்டம் முழுவதும் பரவியுள்ளனர். இம் மாவட்டத்தைப் பொருத்தவரை அனைத்து வகையான மூலிகைளும் எளிதாகக் கிடைக்கின்றன.
குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அரசு தோட்டக்கலைப் பண்ணையில் மூலிகைத் தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு மலையும், நீர் சார்ந்த பகுதிகளும் அதிகமாக உள்ளதால் தமிழக அரசு மூலிகைப் பண்ணை அமைக்க 20 ஏக்கர் இடத்தை ஒதுக்கி தரவேண்டும். அவ்வாறு செய்தால் மூலிகை மருத்துவம் பாதுகாக்கப்படுவதோடு இளம் தலைமுறையும் இதை பின்பற்றும் வாய்ப்பு உருவாகும் என்றார் அவர்.
